குவாந்தான், ஜனவரி.04-
புதிய கல்வி ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், பள்ளிச் சீருடைகள், உபகரணங்கள் ஆகியவற்றின் விலையை அநியாயமாக உயர்த்தி ஆதாயம் பார்க்க முயலும் வியாபாரிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி உபகரணங்கள் திறந்த சந்தை விலையில் இருந்தாலும், அதைப் பயன்படுத்திப் பெற்றோர்களைச் சுரண்டுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது எனத் துணை அமைச்சர் ஃபுஸியா சால்லே அபு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
விலையேற்றம் குறித்து புகார்கள் எழுந்தால் அதிகாரிகள் மின்னல் வேகத்தில் களமிறங்கிச் சோதனை நடத்துவார்கள் என்றும், சட்டத்தை மீறுவோருக்குப் பலத்த அபராதம் காத்திருக்கிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார். சாதாரண மக்களும் தரமான பொருட்களை மலிவான விலையில் வாங்கும் வகையில் ‘ரஹ்மா மடானி: பள்ளிக்குத் திரும்புவோம்' போன்ற சிறப்பு விற்பனைத் திட்டங்கள் நாடு முழுவதும் முடுக்கி விடப்பட்டுள்ளன.








