ஷா ஆலாம், ஜனவரி.10-
பத்துமலை மின்படிக்கட்டு விவகாரத்தில் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஸ்ரி ஆர். நடராஜா தொடுத்துள்ள ஒரு மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கைச் சந்திக்கத் தாம் அஞ்சப் போவதில்லை என்றும், இந்த விவகாரத்தில் யாரிடமும் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் சிலாங்கூர் மாநில மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக அனுப்பப்பட்டுள்ள சட்ட நோட்டீஸ் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களின் பிரதிநிதியாகவும், மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும் உண்மையான தகவல்களை மட்டுமே நான் பொதுமக்களுக்கு விளக்கினேன். தனிநபர் ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. எனவே, டான் ஶ்ரீ நடராஜா கோரியுள்ளபடி மன்னிப்புக் கேட்கவோ அல்லது இழப்பீடு வழங்கவோ முடியாது.
இந்த விவகாரத்தில் மாநில சட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று, சட்டப்பூர்வமாகவே இதனைச் சந்திக்கத் தயாராக உள்ளேன்," என மிகவும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
பத்துமலை மின்படிக்கட்டுத் திட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை வெளிப்படையாகக் கூறியதற்காக இந்த ஒரு மில்லியன் ரிங்கிட் வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில், பாப்பாராய்டுவின் இந்த நேரடியான பதில் சிலாங்கூர் அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








