கோலாலம்பூர், ஜனவரி.07-
புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள இராணுவத் தளபதி டத்தோ அஸான் முகமட் ஒத்மானை இன்று சந்தித்த மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், மலேசிய இராணுவத்தில் நேர்மை மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி, 31-வது இராணுவத் தளபதியாக அஸான் முஹமட் ஒத்மான் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று புதன்கிழமை புக்கிட் துங்கு அரண்மனையில் இச்சந்திப்பானது நடைபெற்றது.
ஊழல் என்பது தேசியப் பாதுகாப்புப் படைகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதை சுட்டிக் காட்டிய மாமன்னர், இராணுவத்தில் அதிகார துஷ்பிரயோகமோ, தவறான நடத்தைகளோ சகித்துக் கொள்ளப்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இராணுவ வீரர்கள் அனைவரும் உயர்ந்த நேர்மைத் தரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் மாமன்னர் வலியுறுத்தினார்.
அதே வேளையில், மலேசிய இராணுவத்தில் கறைபடியாத, வெளிப்படையான நிர்வாகத்தை மேம்படுத்துவதில் அஸான் முஹமட் ஒத்மான் ஒரு முன்மாதிரியாகத் திகழ்வார் என்ற தனது எதிர்பார்ப்பையும், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இச்சந்திப்பில் வெளிப்படுத்தினார்.








