பெட்டாலிங் ஜெயா, ஜூலை.26-
சாரா எனப்படும் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா திட்டத்தின் வாயிலாக அரசாங்கம் வழங்கவிருக்கும் 100 ரிங்கிட் உதவித் தொகை தொடர்பில் எந்தவொரு ஸ்கேம் மோசடிச் செயலிலும் மக்கள் சிக்காமல் இருக்க விழிப்பாக இருக்கும்படி துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங் ஆலோசனை கூறியுள்ளார்.
அரசாங்கம் அறிவித்த இந்த 100 ரிங்கிட்டைப் பெறுவதற்கு மக்கள் எந்தவொரு விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. அதே வேளையில் எங்கேயும் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அவர் நினைவுறுத்தினார்.
18 வயதுடையவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களின் மைகாட் அடையாள அட்டையில் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் அந்த 100 ரிங்கிட் சேர்ப்பிக்கப்பட்டு விடும் என்று லிம் ஹுய் யிங் தெளிவுபடுத்தினார்.
இந்த 100 ரிங்கிட்டைப் பெறுவதற்கு எங்கே பதிவு செய்ய வேண்டும், யாரிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும் என்று பலர் வினவிய வண்ணம் உள்ளனர்.
அதே வேளையில் இந்த 100 ரிங்கிட்டைப் பெறுவதற்குத் தங்களிடம் பதிவு செய்ய வேண்டும் என்று சில தரப்பினர்கள் கூறி வருவதாகத் தாங்கள் புகார்கள் பெற்ற வண்ணம் இருப்பதாக லிம் ஹுய் யிங் விளக்கினார்.








