கோலாலம்பூர், பிப்ரவரி.13-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கியின் பங்கு உரிமை சர்ச்சையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என்று கூறி, வரும் ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் சோகோ வணிக வளாகத்தின் முன்பு, பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#TangkapAzamBaki Secretariat என்ற ஏற்பாட்டு குழுவானது இப்பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.
அஸாம் பாக்கியின் ராஜினாமாவைத் தவிர, இந்த விவகாரம் குறித்து மேல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், பொதுப் பல்கலைக்கழகங்களில் அவரது துணைப் பேராசிரியர் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அக்குழுவானது கோரிக்கை விடுக்கிறது.
இந்த விவகாரத்தில், அஸாம் பாக்கிக்கு ஆதரவாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுத்த பதிலையும் விமர்சித்ததுடன், மலேசியர்கள் அனைவரையும் பேரணியில் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.
நிதிச் சேவை நிறுவனமான Velocity Capital Bhd-இல் அஸாம் பாக்கிக்கு 17.7 மில்லியன் பங்குகள் இருப்பதாக வெளியான புளூம்பெர்க் செய்தியையடுத்து, அவருக்கு எதிராகக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இருப்பினும், அஸாம் பாக்கி தனக்கு பங்குகள் எதுவும் இல்லை என்றும், புளூம்பெர்க் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த அன்வார், அஸாம் பாக்கி சிறந்த முறையில் கடமையாற்றி வரும் போது, அவரை எதற்காகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.








