கோல திரங்கானு, ஆகஸ்ட்.21-
ஒரு மாத ஆண் குழந்தைக்கு உடல் ரீதியாகக் காயம் விளைவித்ததாக ஒரு தம்பதியர், கோல திரங்கானு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
27 வயது சைஃபுல் இக்வான் அப்துல் ரஹ்மான் மற்றும் அவரின் 30 வயது மனைவி நோர் அஸிலா ஷாரிஃப் ஆகியோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
வளர்ப்புத் தாயாரான தனது மனைவியுடன் சேர்ந்து அந்த ஆடவர் தனது சொந்தக் குழந்தைக்குக் காயம் விளைவித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதத்திற்கும், ஜுன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலக் கட்டத்தில் கோல திரங்கானு, கம்போங் பங்கோல் மானிர் என்ற இடத்தில் அந்தத் தம்பதியர், இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








