கோலாலம்பூர், ஆகஸ்ட்.25-
13 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டமும் நியாயமான முறையில் செயல்படுத்தப்படவிருப்பதால் ஒவ்வோர் இனத்திற்கும் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டின் அளவு குறித்து இன சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கேட்டுக் கொண்டார்.
மலாய்க்கார்கள், சீனர்கள், இந்தியர்கள், சபா – சரவாக் ஓராங் அஸ்லி மக்கள், மாற்றுத் திறனாளிகள், இளையோர்கள் உட்பட ஒவ்வோர் இனத்திற்கும், அவர்களின் தேவைக்கு ஏற்ப அனுகூலங்களை வழங்குவதில் மடானி அரசாங்க உறுதிப் பூண்டு இருப்பதாக இன்று நாடாளுமன்ற மேலவையில் 13 ஆவது மலேசியத் திட்டம் மீதான மசோதா குறித்து உரையாற்றுகையில் டத்தோ ஶ்ரீ அன்வார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இன ரீதியான ஒதுக்கீடு குறித்து அதனை இன விவகாரமாக்கி சர்ச்சை செய்யப்படும் சம்பவங்களினால் தாம் மிகுந்த அதிருப்தியில் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
மலாய்க்கார்கள் அல்லது இந்தியர்கள் அல்லது சீனர்கள் இது போன்ற நிதி ஒதுக்கீட்டினால் ஓர் இனத்திற்கு மட்டும் அதிகா சலுகைகள் வழங்கப்பட்டு விட்டதைப் போன்று தவறாகச் சித்திரிக்கப்படுவதாக அவர் கூறினார்.
எனினும் தம்மைப் பொறுத்தவரை ஓர் இனத்திற்கு அதிகமான அனுகூலங்களோ அல்லது சலுகைகளோ வழங்கப்படும் போது அது குறித்து சர்ச்சை செய்யவோ, வாதிடவோ கூடாது என்று டத்தோ ஶ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு நிதி ஒதுக்கீடும் அந்த இனத்தைப் பார்த்து வழங்கப்படுவதில்லை, மாறாக, அவர்களின் தேவைகளைப் பொறுத்து வழங்கப்படுகிறது என்று பிரதமர் விளக்கினார்.
இந்தியர்களுக்கு தேவை இருக்குமானால் தாராளமாகக் கேட்கலாம். அது போல மலாய்க்காரர்களும் நாட்டில் பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்கள்தான் அதிகளவில் ஏழைகளாக உள்ளனர் என்று பிரதமர் தெரிவித்தார்.








