கோலாலம்பூர், அக்டோபர்.22-
போதைப்பொருள்கள் கலந்த 'வேப்' சாதனங்களின் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், மலேசியக் காவற்படை நாட்டில் வேப் பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்வதற்கான முயற்சிகளுக்குத் தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இஃது ஒரு தீவிரமான, செயலூக்கமான நடவடிக்கையாக இருக்கும் என்று உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஷாம்சூல் அனுவார் நசாரா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வேப் பொருட்களின் உள்ளடக்கத்தையும் விநியோக வழிமுறைகள் மீதான கட்டுப்பாடுகளை அரசாங்கம் தீவிரமாக மேம்படுத்தி வருவதாகவும், இது குறித்து சமூகத்தின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக போதைப்பொருள் கலந்த வேப் பயன்பாட்டைத் தடுப்பதற்காகக் காவற்படையும் தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனமும் சுகாதார அமைச்சுடன் இணைந்து பல்வேறு கூட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், போதைப்பொருள் பயன்பாடு 32.5 விடுக்காடு அதிகரித்துள்ளதாகவும், 2024-இல் 192 ஆயிரத்து 857 தனிநபர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் துணை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.








