ஷா ஆலாம், ஜூலை.28-
அண்மையில் பூச்சோங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆடவர் ஒருவரை வலுக்கட்டாயமாக லோரியில் ஏற்றி, கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் இரண்டு சகோதரர்கள் ஷா ஆலாம், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
லோரி உதவியாளரான 19 வயது வி. கீர்த்திக் ராம் மற்றும் அவரின் தம்பியான ஒரு டிஷ்பேஜ் பணியாளர் 18 வயது வி. தெஷ்வீன் ராம் ஆகியோர் 21 வயது இளைஞரை லோரியில் ஏற்றிக் கடத்திச் சென்றதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜுலை 22 ஆம் தேதி மாலை 6.38 மணிளவில் பூச்சோங், புக்கிட் பூச்சோங், ஜாலான் பெர்சியாரான் பெர்மாய் என்ற இடத்தில் இரு சகோதர்கள் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 7 ஆண்டுச் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 365 பிரிவின் கீழ் இருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
தாங்கள் கடத்திச் சென்ற நபருக்குக் காயம் விளைவித்ததாக இரு சகோதர்களும் மேலும் ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
எனினும் இரு சகோதர்களும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் அவர்களை தலா 5 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இவ்வழக்கு வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பான காணொளி, அண்மையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பெரும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.








