புத்ராஜெயா, ஜூலை22-
ஜோகூர் பாருவில் உள்ள சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பேருந்து ஓட்டநர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஒரு பேருந்து போக்குவரத்து நிறுவனத்திற்கு எதிராக மனித வள அமைச்சு இரண்டு விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளது.
அந்த பேருந்து நிறுவனம், தொழிலாளர்களுக்குத் தீர்க்கப்படாத பல பிரச்னைகளை உள்ளடக்கியுள்ளது என்று பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மனித வள அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சம்பளக் குறைபாடுகள், சிறப்புப் பணிக்கான அலவன்ஸ் தொகை, தொழிலாளர்களைத் திடீரென்று பணியிலிருந்து நீக்குதல் உள்ளிட்ட பல பிரச்னைகளை அந்த போக்குவரத்து நிறுவனத்தின் ஓட்டுநர்கள் எதிர்நோக்கி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்று மனித வள அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆள்பல இலாகாவில் புகார் செய்தால், பழிவாங்கும் செயலுக்கு ஆளாகலாம் என்று பயந்து, பேருந்து ஓட்டநர்கள் பலர் புகார் கொடுக்க பயந்த வண்ணம் இருந்துள்ளனர்.
இது போன்ற வேலை நிறுத்தம் மீண்டும் நிகழாமல் இருக்க இது குறித்து விசாரணை செய்வதற்கு இரண்டு அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாக மனித வள அமைச்சு தெரிவித்துள்ளது.








