Apr 17, 2026
Thisaigal NewsYouTube
ஆள் மாறாட்டத்தால் நேர்ந்த சிவப்பு மை வீச்சு - ஒரு குடும்பம் அச்சம்
தற்போதைய செய்திகள்

ஆள் மாறாட்டத்தால் நேர்ந்த சிவப்பு மை வீச்சு - ஒரு குடும்பம் அச்சம்

Share:

நெகிரி செம்பிலான், தம்பினில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சிவப்புச் சாய வீச்சு அவ்வட்டார மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தாமான் இண்டா பகுதியில் தனது வீட்டில் அதிகாலை 3.30 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த 42 வயதுடைய ஹாவ் ஹுய் சிங் என்பவர் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் முகப்புப் பகுதி மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புரோடுவா அருஸ் ரக கார் ஆகியவை சிவப்பு சாயம் வீச்சு நடத்தப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட ஹுய் சிங் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில், தங்கள் குடும்பத்தினர் யாரிடமும் கடன் வாங்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது கடன் கொடுத்தவர்கள் ஆள் மாறாட்டத்தினால் அல்லது முகவரி குழப்பத்தினால் செய்த தவறான செயலாக இருக்கலாம் என்று அவர் கருதுகிறார். இந்தச் சம்பவத்தால் சுமார் 4,000 ரிங்கிட் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன், வீட்டில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் இதய நோயாளியான தனது மாமனாரின் உடல்நிலை குறித்து அவர் பெரும் கவலை கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஹுய் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்துள்ளனர்.

Related News