கோலாலம்பூர், அக்டோபர்.30-
பினாங்கு கடலடி சுரங்கப் பாதை நிர்மாணிப்புத் திட்டம் தொடர்பாக விசாரணைக்கு அமர்த்தப்பட்ட எஸ்பிஆர்எம் விசாரணை அதிகாரி, பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிராக ஒரு தலைப்பட்சமாகச் செயல்பட்டுள்ளார் என்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸுல்ஹில்மி ரம்லி என்ற அதிகாரி, நீதிமன்றத்தில் அளித்த சாட்சியங்கள் அனைத்தும் இந்த வழக்கைப் பற்றிய கருத்துக்களேத் தவிர வழக்கின் தன்மையைக் கொண்டது அல்ல என லிம் குவான் எங் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் வழக்கில் அவர் தரப்பில் எதிர்வாதத்தைச் சமர்ப்பித்த வழக்கறிஞர் ராம் கர்ப்பால் இதனைத் தெரிவித்தார்.
அந்த அதிகாரி தனது நீதிமன்ற சாட்சியத்தில் இது நில மோசடி என்றும் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அதிகாரியைப் பொறுத்தவரை விசாரணையின் தன்மையை நீதிமன்றத்தில் விளக்க வேண்டுமே தவிர சொந்த கருத்துகளைத் தெரிவித்து இருக்கக்கூடாது என்று ராம் கர்ப்பால் குறிப்பிட்டார்.
லிம் குவான் எங்கிற்கு எதிராக அந்த அதிகாரி எழுத்துப்பூர்வமாக வழங்கிய சாட்சியங்கள் சொந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால் அவரின் சாட்சியங்களின் ஒரு பகுதி, நீதிமன்ற குறிப்பேட்டிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று ராம் கர்ப்பால் கேட்டுக் கொண்டார்.








