கடந்த ஜூன் 1-ஆம் தேதி குளுவாங், சிம்பாங் ரெங்கத்தில் ஐந்து பேர் பலியாவதற்குக் காரணமான கார் பந்தய விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 19 வயது இளைஞர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தடுப்புக் காவல் காலம் முடிவடைந்ததை அடுத்து, துணை பப்ளிக் பிராசிகியூட்டரின் அறிவுறுத்தலின் பேரில் அந்த இளைஞர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகக் குளுவாங் மாவட்ட போலீஸ் துறைத் தலைவர் பஹ்ரின் நோ தெரிவித்தார்.
முதலில் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட அந்த இளைஞர், பின்னர் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் மறுகைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். இவருடன் மெர்சிடிஸ் காரில் பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இவரது சகோதரர், பிஎம்டபிள்யூ காரை எதிர்த்திசையில் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதில் அவரோடு சேர்த்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் நால்வர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்த மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.








