ஈப்போ, டிசம்பர்.07-
ஈப்போ Station 18-இல் நடந்த அதிரடிச் சோதனையில், பள்ளி மாணவர்கள் உட்பட பல இளைஞர்கள் சாலைச் சண்டையாளர்களும் சட்டத்திற்குப் புறம்பான மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை பேரா மாநிலக் காவற்படை, சாலைப் போக்குவரத்துத் துறை, சுற்றுச் சூழல் துறை, தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம் ஆகியவையால் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில், 335 பேர் சோதனையிடப்பட்டனர். அவர்களில் 15 வயது முதல் 42 வயதுக்குட்பட்டவர்கள் அடங்குவர். 30 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, 16 வயது பள்ளி மாணவன் உட்பட 11 பேருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில் போதைப் பொருள் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சாலையில் விபத்துகளையும் குற்றங்களையும் குறைப்பதற்காகப் பேரா மாநிலக் காவற்படையின் ஒருங்கிணைந்த இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று அதன் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.








