Jul 1, 2026
Thisaigal NewsYouTube
14 மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் - இரண்டு பெண்கள் மீதும் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

14 மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் - இரண்டு பெண்கள் மீதும் குற்றச்சாட்டு

Share:

ஜோகூர் , ஸ்கூடாய் பண்டார் செலேசா ஜெயா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் முன்பாக கடந்த வாரம் நிகழ்ந்த மோதல் மற்றும் கலவரம் தொடர்பாக 14 மாணவர்கள் இன்று ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி மதியம் 12.45 மணியளவில் சட்டவிரோதமாகக் கூடுதல், பொது இடத்தில் சண்டையிட்டு அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் மற்றும் கலவரத்தில் ஈடுபடுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நபிலா நிசாம் முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கில் 12 முதல் 16 வயதுடைய 6 மாணவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர். இவர்களுக்கான நன்னடத்தை அறிக்கை மற்றும் இறுதித் தீர்ப்புக்காக நீதிமன்றம் வரும் ஏப்ரல் 29-ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது.

அதே வேளையில், 15 முதல் 17 வயதுடைய மற்ற 8 மாணவர்கள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர். நீதிமன்றம் அவர்கள் அனைவருக்கும் தலா 800 ரிங்கிட் பிணைத் தொகையுடன், ஒரு நபர் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது.

இதே மோதல் சம்பவத்தின் போது, 17 வயது மாணவர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியதாக 36 மற்றும் 37 வயதுடைய ஆர். லோகநாயகி மற்றும் எஸ். லட்சுமி ஆகிய இரு பெண்கள் மீதும் தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் குற்றச்சாட்டை மறுத்த நிலையில், தலா 2,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதுடன், பெரியவர்களும் இதில் தலையிட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஏப்ரல் 28 மற்றும் மே 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

Related News