பினாங்கு, ஜெலுத்தோங் பகுதியில் உள்ள சீனக் கோயில் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் நிகழ்ந்த கத்தி வெட்டு தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.
முன்விரோதம் காரணமாக நடந்து இருக்கலாம் என்று நம்பப்படும் இந்தத் தாக்குதல் தொடர்பாக, 26 முதல் 38 வயதுக்குட்பட்ட 6 பேரை திமூர் லவுட் மாவட்ட போலீசார், கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் வெட்டுக் கத்தி, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு ஏற்கனவே குற்றப் பின்னணி இருப்பது தெரியவந்துள்ளது. ஜூன் 22 முதல் 28 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு இவர்களைத் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளதாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் டென்னிஸ் லிம் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் இவர்கள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் தேடப்பட்டு வருவதாக டென்னிஸ் லிம் குறிப்பிட்டார்.








