Oct 8, 2026
Thisaigal NewsYouTube

பெற்றோருக்கு அருகில் வசிக்கும் வீட்டு மானியத் திட்டம்: 2027 வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்க அமைப்பு வலியுறுத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெற்றோருக்கு அருகில் வசிக்கும் வீட்டு மானியத் திட்டம்: 2027 வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்க அமைப்பு வலியுறுத்து

முதிய பெற்றோருடன் அல்லது அவர்களுக்கு அருகாமையில் வசிப்பதை ஊக்குவிக்கும் வகையில், 2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் வீட்டு மானியங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளைச் சேர்க்க வேண்டும் என மலிவு விலை வீடுகளுக்காக குரல் கொடுத்து வரும் ரீச் (REACH) என்ற அரசு சாரா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ரீச்சின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இஸ்கண்டார் அப்துல் சாமாட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தொடர்பான முன்மொழிவு இந்த ஆண்டு தொடக்கத்தில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதை நடைமுறைப்படுத்தக்கூடிய கொள்கையாக மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் முதியோர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அவர்களின் நலனைப் பாதுகாப்பது அரசாங்க நிறுவனங்கள், பராமரிப்பு மையங்கள் அல்லது நல உதவிகளை மட்டுமே சார்ந்திருக்க முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னுதாரணமாக சிங்கப்பூரின் வீடமைப்பு மற்றும் மேம்பாட்டு வாரியம் வழங்கும் பெற்றோர் அருகாமையில் வசிக்கும் வீட்டு மானியத் திட்டத்தை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

அதன்படி, பெற்றோருடன் ஒரே வீட்டில் வசிப்பதற்கான வீடு வாங்குவதற்கு 30,000 டாலர்கள் வரையும், பெற்றோரின் வீட்டில் இருந்து 4 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வீடு வாங்குவதற்கு 20,000 டாலர்கள் வரையும் மானியம் வழங்கப்படுகிறது. இதுபோன்ற திட்டத்தை மலேசியாவும் பின்பற்றலாம் என இஸ்கண்டார் தெரிவித்துள்ளார்.

இந்த ஊக்கத்தொகைகள் நீண்டகாலத்திற்கு தேசிய சுகாதார சேவை, அவசரகால உதவிகள் மற்றும் முதியோர் பராமரிப்பு அமைப்புகள் மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக பி40 மற்றும் எம்40 குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, பின்னர் அதை விரிவுபடுத்தலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

மேலும், மலேசியாவில் முதியோர் தனியாக வசிக்கும் நிலை அதிகரித்து வருவதாகவும், வேலைக்காக பிள்ளைகள் வேறு இடங்களுக்குச் செல்வதால், குறிப்பாக பண்டிகைக் காலங்களில் சில முதியவர்கள் போதிய ஆதரவின்றி விடப்படும் அபாயம் இருப்பதாகவும் இஸ்கண்டார் முன்னதாக மார்ச் மாதம் தெரிவித்திருந்தார்.

அதேவேளையில் தனியாக வசிக்கும் முதியவர்களின் மரணம் கூட சில நேரங்களில் உடனடியாக கவனிக்கப்படாமல் போகும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →