Mar 31, 2026
Thisaigal NewsYouTube
மலேசியக் கோடீஸ்வரர் டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன் காலமானார்
தற்போதைய செய்திகள்

மலேசியக் கோடீஸ்வரர் டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன் காலமானார்

Share:

கோலாலம்பூர், நவ. 28-


மலேசியாவின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரும், மலேசியாவிலும், உலகளாவிய நிலையிலும் மிக நீண்டகால வணிகப் பின்னணியைக் கொண்டவருமான டான்ஸ்ரீ T. ஆனந்தகிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது 86.

உசஹா தெகாஸ் சென்.பெர்ஹாட் எனும் முதலீட்டு நிறுவனத்தின் தலைவருமான டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன் காலமானதை அவரின் குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர்.

டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன் மறைவு, நாட்டிற்கு குறிப்பாக வர்த்தகம் மற்றும் பொருளாதார ரீதியாக பேரிழப்பாகும் என்று தொழில் அதிபர்கள் வர்ணித்துள்ளனர்.

எவ்விதக் குடும்ப பின்புலமும், பிரபலமும் இல்லாமல், வணிகக் குடும்பம் அல்லாத பின்னணியைக்கொண்ட இலங்கை வம்சாவளியினரான ஆனந்த கிருஷ்ணன், தமது தொடக்கக்கல்வியை கோலாலம்பூர். பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் நான்காம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டு கல்வியை VI ( விஐ) எனப்படும் கோலாலம்பூர் விக்டோரியா இன்ஸ்டீயூட்டில் மேற்கொண்டார்..

வணிகத்துக்கான உலகப்பெற்ற கல்வி மையமான அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தான் பெற்ற கல்வி, அமெரிக்காவில் பெற்ற வணிக அனுபவத்தைக்கொண்டும், எண்ணெய் பரிமாற்ற வணிகத்தில் தான் ஏற்கனவே ஈட்டிய வருமானத்தைக்கொண்டும் மலேசியாவில் சில வணிக முயற்சிகளில் ஈடுபட்டவர் ஆவர்.

நாட்டிற்கு சுமார் 22 ஆண்டு காலம் பிரதமராக பொறுப்பேற்று இருந்து துன் மகாதீர் முகமட்டின் ஆதரவைப்பெற்று, பல்வேறு நவீனமயமான வணிகத் திட்டங்களில் ஈடுபட்டு, தனது வணிக நிறுவனங்களைப் பெருக்கி, தொழிலை பெருக்கிக்கொண்டவர் ஆவார்.

ஆனந்த கிருஷ்ணன் தொடங்கிய, முதலீடு செய்த தொழில்கள் அனைத்துமே அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியைப் பெற்றவை என்பதோடு அடுத்தக்கட்ட நவீன தொழில் நுட்பத்தைக்கொண்டவை என்பதுதான் அவர் மிக குறுகிய காலத்தில், மிகப்பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட சீன வணிகர்களைப் பின்னுக்குத் தள்ளி, நாட்டின் இரண்டாவது பெரிய பணக்காரர் இடத்தைப் பிடிப்பதற்கு உதவியது.

ஆஸ்டரோ துணைக்கோளத் தொலைகாட்சி ஒளிபரப்புக்கான அனுமதியைப் பெற்ற போது, அடுத்த பத்தாண்டுகளுக்கு வேறு எந்த நிறுவனத்திற்கும் அத்தகைய அனுமதி உரிமம் வழங்கப்படாது என்ற அரசாங்கத்தின் உத்தரவாதத்துடன்தான் அந்த ஒளிபரப்பை ஆனந்த கிருஷ்ணன் தொடங்கினார்.

இது ஆனந்த கிருஷ்ணனின் தூர நோக்கு வணிக வியூகத்திற்கான உதாரணமாகும். தவிர தொலைத்தொடர்பில் மற்ற நிறுவனங்களோடு போட்டி போட்டு சாதிக்கும் ஆனந்தகிருஷ்ணனின் வணிகத் திறனுக்கு மற்றொரு சாட்சியாக மலேசிய தொலைத்தொடர்பில் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்திய MAXIS என்ற தொலைத்தொடர்பு நிறுவனமாகும்.

கோலாலம்பூர் மாநகரின் நில அடையாளமாக விளங்கும் நாட்டின் உயர்ந்த கட்டடம் என்று சில ஆண்டுகள் முன்புவரை போற்றப்பட்ட பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்தை நிர்மாணிப்பதில் பெட்ரோனாசுடன் இணைந்து முக்கியப் பங்கு வகித்தவர் ஆனந்த கிருஷணன் என்பது வரலாறாகும்.

இவ்வாறு தனக்கென்ன தொழில்துறையில் பெரும் சாம்ராஜ்யத்தையும், விசித்திரமான வலைப்பின்னலையும் கொண்டிருந்த ஆனந்தி கிருஷ்ணன், முதல் முறையாக அதுவும் தனது 79 ஆவது வயதில், இந்திய உச்சநீதிமன்றத்தின் கிடுக்கிப்பிடியில் சிக்கிக்கொண்டார்.

மேக்சிஸ் நிறுவனம், தொலைத் தொடர்புத்துறையில் மலேசியாவில் கோலோச்சிக் கொண்டிருந்த வேளையில் தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு இயங்கி வந்த ஏர்செல் நிறுவனத்திலும் 2006 ஆம்ஆ ண்டில் முதலீடு செய்து அதன் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கியது.

அப்போது மிகச் சாதரணமாக பார்க்கப்பட்ட இந்த வணிக ஒப்பந்தம் விஸ்வரூபம் எடுத்து ஆனந்தகிருஷ்ணனின் வணிக நன்னடத்தை குறித்த சிக்கல்களை ஏற்படுத்தியது.
புதுடில்லியில் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற 2 ஜி வழக்கு விசாரணையில் ஆனந்த கிருஷ்ணன் நீதிமன்றம் வராவிட்டாலும் அவரது 2 ஜி அலைக்கற்றை உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என்று கடந்த 2017 ஆம் ஆண்டு அதிரடி தீர்ப்பை வழங்கியது. .

கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு ஆனந்த கிருஷ்ணன் அதிபதியாக விளங்கிய போதிலும் தனது ஆருயிர் மகன், இளம் வயதிலேயே புத்தப்பிக்குவாக மாறிய போதிலும், தனது இறுதி மூச்சு வரையில் தனது மகனின் விருப்பத்திற்கு எதிராக நடந்து கொண்டதில்லை. மகனின் விருப்படிபடியே மனம் கோணாமல், தாய்லாந்தில் உள்ள தனது மகனை ஆனந்த கிருஷ்ணன் அடிக்கடி சந்தித்து வந்தது அவரின் பாசப்பிணைப்பை உறுதி செய்தது.

Related News