Jun 8, 2026
Thisaigal NewsYouTube
டாயா கெர் ஜெயா 2.0 திட்ட முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்கு மனித வள அமைச்சு முழு ஒத்துழைப்பு / அமைச்சர் ரமணன் உறுதி
தற்போதைய செய்திகள்

டாயா கெர் ஜெயா 2.0 திட்ட முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்கு மனித வள அமைச்சு முழு ஒத்துழைப்பு / அமைச்சர் ரமணன் உறுதி

Share:

டாயா கெர் ஜெயா 2.0 திட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் 9.01 மில்லியன் ரிங்கிட் முறைகேடுகள் தொடர்பான எஸ்பிஆர்எம் விசாரணைக்கு, மனிதவள அமைச்சு முழு ஒத்துழைப்பை வழங்கும் என அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க உதவித் திட்டங்கள் அனைத்தும் உயர்ந்த நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் முறையான நிர்வாகக் கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதை அமைச்சு தொடர்ந்து உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தேகத்திற்குரிய முறைகேடுகள் முதன்முதலில் சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோவின் உள்கட்டுப்பாட்டு கண்காணிப்பு மற்றும் மோசடி தடுப்பு அமைப்புகள் மூலம் கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,பெர்கேசோவின் மோசடி தடுப்பு, ஒழுக்கம் மற்றும் நேர்மை பிரிவான ஏஎஃப்இஐ, கடந்த 2024-ஆம் ஆண்டின் இறுதியில் மேற்கொண்ட உள்துறை தரவு பகுப்பாய்வின் போது சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் மற்றும் சாத்தியமான முறைகேடுகளை அடையாளம் கண்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பெர்கேசோ இந்த வழக்கை, கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பேராக் மாநில எம்ஏசிசிக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது.

பின்னர் விசாரணையானது விரிவடைந்ததால், இந்த வழக்கு புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டு மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதற்கட்ட கண்டறிதலைத் தொடர்ந்து, சந்தேகிக்கப்படும் தவறான பயன்பாடு தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தவும், டாயா கெர் ஜெயா 2.0 திட்டத்தின் கீழ் கோரப்பட்ட உதவித்தொகை தொடர்பான மோசடி அளவைத் தீர்மானிக்கவும், உளவுத்தகவல் சேகரிப்பு, கண்காணிப்பு மற்றும் விரிவான விசாரணைகளை ஏஎஃப்இஐ தொடங்கியுள்ளதாக இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் ஆர். ரமணன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கு தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அப்துல் ஹாலிம் அமான் வெளியிட்ட அறிக்கையில், இந்த மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் நாடு முழுவதும், 143 நிறுவனங்களுக்கும், 320 தொழிலாளர்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related News