மக்களின் ஆதரவைப் பெற்று ஜனநாயக முறையில் வென்றுள்ள எந்த ஒரு இனத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ அரசாங்கத்தில் இடமளிக்க மறுப்பது ஆணவமான செயலாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தகவல் தொடர்பு அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் இன்று உரையாற்றிய அவர், மலேசியர்கள் நம்மிடையே வேறுபாடுகளை சகித்துக் கொள்வதைத் தாண்டி, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயக அமைப்பிலும் நடைமுறையிலும் நாம் மக்களின் தேர்வை மதிக்க வேண்டும் என்றும், ஜனநாயகத் தீர்ப்புகளுக்கு மதிப்பளிப்பதே நல்லாட்சியின் அடிப்படை கொள்கையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எந்த நபரையோ அல்லது அரசியல் கட்சியையோ பெயர் குறிப்பிடாமல் பேசிய அன்வார், கடுமையான அரசியல் பிரசாரங்களின் போது சில நேரங்களில் அளவுக்கு மீறிய கருத்துகள் வெளிப்படுவதாகவும், அவற்றை திருத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஒருவரின் நம்பிக்கைகள் மற்றும் பார்வைகள் அவர்களின் வளர்ப்பு மற்றும் வாழ்க்கை அனுபவங்களால் உருவாகின்றன என்றாலும், அந்த வேறுபாடுகள் மனிதநேயமற்ற அணுகுமுறைக்கு வழிவகுக்கக் கூடாது என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மக்கள் மத்தியில் புரிந்துணர்வு, பரஸ்பர மரியாதை மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதே நாட்டின் நல்லிணக்கத்திற்கும் ஜனநாயகத்திற்கும் அடித்தளமாக இருக்கும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.








