முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கின் பொதுமன்னிப்பு மனுவை கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியமான எஃப்டிபிபி (FTPB) அடுத்த கூட்டத்திற்கு ஒத்திவைத்ததற்கான காரணத்தை அரசாங்கம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என பாஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பாஸ் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் கூறுகையில், எஃப்டிபிபி உறுப்பினர்களில் யாராவது மனுவை ஒத்திவைக்கக் கோரியிருக்க வேண்டும் அல்லது அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் என்பதால்தான் இந்த விவகாரம் ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இது பொதுமக்களின் நலன் சார்ந்த முக்கிய விவகாரம் என்பதால், அரசாங்கம் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, எஃப்டிபிபி-யின் நடவடிக்கைகள் அலுவலக இரகசிய சட்டத்தின் கீழ் ரகசியமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் நஜிப்பின் இரண்டாவது மன்னிப்பு மனுவை பரிசீலிக்க இருந்த நிலையில், மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அந்த மனுவை அடுத்த எஃப்டிபிபி கூட்டத்தில் பரிசீலிக்க ஒத்திவைக்க ஒப்புதல் அளித்ததாக பிரதமர் துறை தெரிவித்துள்ளது.








