புக்கிட் அமான் நிர்வாகப் பிரிவு இயக்குநர் அப்துல் அஸிஸ் அப்துல் மாஜிட், கடந்த செப்டம்பர் 9 முதல் அமலுக்கு வரும் வகையில் அரச மலேசிய போலீஸ் படைத்துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
59 வயதான அப்துல் அஸிஸ், கடந்த ஜூலை மாதம் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் போலீஸ் பணியில் பணியாற்றிய பின்னர் ஓய்வு பெற்ற அயோப் கான் மைடின் பிட்சைக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், பிரதமரின் ஆலோசனையின் பேரில், போலீஸ் படை ஆணயத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து அப்துல் அஸிஸின் நியமனத்திற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அப்துல் அஸிஸுக்கு போலீஸ் துறையில் உள்ள நீண்டகால அனுபவமும், நிபுணத்துவமும் போலீஸ் படை துணைத் தலைவர் பதவிக்குத் தேவையான தலைமைத்துவத் திறனை வழங்குவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அப்துல் அஸிஸ், கடந்த 2024-ஆம் ஆண்டு புக்கிட் அமான் நிர்வாகப் பிரிவின் இயக்குநராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர், சிறப்புப் பிரிவின் துணை இயக்குநராகப் பணியாற்றினார்.
மேலும், பினாங்கு மாநில துணை போலீஸ் தலைவராகவும், புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.








