குவாந்தான், ஜனவரி.20-
போதைப்பொருள் தொடர்பான குற்றவியல் வழக்கில் சிக்கிய நபரை விடுவிக்க, சுமார் 30,000 ரிங்கிட் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் புகாரில், இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலான போலீஸ் அதிகாரி ஒருவரும் அவரது தம்பியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பகாங் மாநிலக் கிளை இன்று காலை குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்வைத்த விண்ணப்பத்தை ஏற்று, மாஜிஸ்திரேட் முஹமட் ஃபௌஸான் முஹமட் சுஹாரி இருவருக்கும் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வரை 5 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.
20 மற்றும் 30 வயதுடைய அவ்விருவரும், நேற்று மாலையில் பகாங் மாநில எஸ்பிஆர்எம் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்த போது கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2021 முதல் 2025-ஆம் ஆண்டு காலப் பகுதியில் இவர்கள் இருவரும் இணைந்து இந்த ஊழலில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.








