கோலாலம்பூர், நவம்பர்.19-
கடந்த திங்கட்கிழமை மாலையில் சுங்கை கிளாங் ஆற்றின் சலோமா பாலத்தின் கீழ் நின்று கொண்டு இருந்த போது, திடீரென்று கரைப்புரண்டோடிய வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக நம்பப்படும் 34 வயது கட்டுமான மேலாளர் கே. சுரேஸின் Four-wheel drive Pajero Mitsubishi வாகனம் இன்று காலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவ இடத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில் சுரேஸின் வாகனம் மூழ்கிய நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக கோலாலம்பூர், டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சஸாலி அடாம் தெரிவித்தார்.
எனினும் வாகனத்திற்குள் சுரேஸ் காணப்படவில்லை. அதே வேளையில் நேற்று மாலை 6 மணியளவில் நிறுத்தப்பட்ட மீட்புப் பணி, இன்று காலை 7 மணிக்குத் தொடக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சுரேஸைத் தேடும் பணியில் தீயணைப்பு, மீட்புப்படை, பொது தற்காப்புப் படை, அரச மலேசிய போலீஸ் படை மற்றும் 21 முக்குளிப்பவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வரை Dron மூலம் கிள்ளான் ஆறு முழுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஏசிபி சஸாலி மேலும் கூறினார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் கனத்த மழை பெய்து கொண்டு இருந்த போது, கோலாலம்பூர் கம்போங் பாருவிற்கு அருகில் சுங்கை கிளாங் ஆற்றில் சலோமா பாலத்தின் கீழ் கட்டுமானத் தளத்தில் நின்று கொண்டு இருந்த சுரேஷ் மற்றும் 11 அந்நிய நாட்டவர்களும் ஆற்றில் திடீரென்று உயர்ந்த நீர் மட்டத்தில் சிக்கிக் கொண்டனர்.
தீயணைப்பு, மீட்புப்படைக்கு தகவல் அளிக்கப்பட்டு 11 அந்நியப் பிரஜைகளும் கயிற்றின் உதவியுடன் காப்பாற்றப்பட்ட வேளையில் தனது வாகனத்தை நகர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு இருந்த சுரேஷ் நீரில் அடித்து செல்லப்பட்டார்.
நேற்று செவ்வாய்க்கிழமை வரை சுரேஸின் கைப்பேசி செயல்பாட்டில் இருந்த வேளையில் இன்று புதன்கிழமை செயலிழந்து விட்டது. ஆற்றோரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணியைக் கடந்த சில தினங்களாக கண்காணித்து வந்த சுரேஷ், வேலை நிறைவு பெறும் திங்கட்கிழமை அன்று திடீரென்று உயர்ந்த நீர் பெருக்கில் வாகனத்துடன் அடித்து செல்லப்பட்டார்.
பாரந்தூக்கி இயந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்ட சுரேஷ் பயன்படுத்திய Pajero Mitsubishi வாகனம், அவரின் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக ஏசிபி சஸாலி தெரிவித்தார்.








