கோலாலம்பூர், பிப்ரவரி.17-
பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி குறித்த கேள்விகளுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பதிலளிக்க மறுத்துள்ளார்.
சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஒற்றுமையில் கவனம் செலுத்துமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மசீச ஏற்பாட்டில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில், இன்று கலந்து கொண்ட அன்வாரிடம், ரஃபிஸி மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அன்வார் அதனைத் தவிர்த்து, புத்தாண்டுக் கொண்டாட்ட உணர்வை வலியுறுத்தினார்.
இன்று சீனப் புத்தாண்டை முன்னிட்டு, ஒற்றுமையில் கவனம் செலுத்துவோம் என்று குறிப்பிட்ட அன்வார், மற்ற விவகாரங்களை இப்போது விவாதிக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.
அன்வாரின் சொந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினரான ரஃபிஸி, கடந்த ஆண்டு பொருளாதார அமைச்சர் பதவியில் இருந்து விலகியதிலிருந்து, பிரதமரின் நிர்வாகம் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகின்றார்.
பல கொள்கை விவகாரங்கள் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து அவர் பகிரங்கமாக கவலைகளை எழுப்பியுள்ளார்.
இதனால் பிகேஆர் கட்சி, அவருக்கு எதிராக சாத்தியமான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.








