கோலாலம்பூர், ஜனவரி.07-
அரச மலேசிய போலீஸ் படையின் 'மைபாயார் பிடிஆர்எம்' பெயரைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் குறித்து போலீசார் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மோசடி கும்பல்கள் பொதுமக்களுக்கு எஸ்எெமெஸ் குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் ஒரு போலி இணையதள இணைப்பை அனுப்புகின்றனர். அதில் டோல் கட்டண நிலுவை அல்லது போக்குவரத்து சம்மன்களுக்கான அபராதங்கள் இருப்பதாகக் கூறி மக்களை நம்ப வைக்கின்றனர்.
அந்தப் போலி இணைப்பை அழுத்தினால், அது அசல் போலீஸ் இணையதளத்தைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு "இப்போது பணம் செலுத்து" என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட வங்கித் தகவல்கள் மற்றும் கடவுச்சொற்களைத் திருடுவதே இவர்களின் நோக்கமாகும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து விசாரணை பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
அரச மலேசிய போலீஸ் படையோ அல்லது சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜேவோ ஒரு போதும் சீரற்ற எண்கள் அல்லது வாட்ஸ்அப் மூலம் பணம் செலுத்தக் கோரி லிங்குகளை அனுப்புவதில்லை என்று அது தெளிவுப்படுத்தியுள்ளது.








