Mar 31, 2026
Thisaigal NewsYouTube
சிறார் இல்லங்களில் சிசிடிவி கட்டாயமாக்கப்பட வேண்டும்: மாறன் சுப்பையா கோரிக்கை
தற்போதைய செய்திகள்

சிறார் இல்லங்களில் சிசிடிவி கட்டாயமாக்கப்பட வேண்டும்: மாறன் சுப்பையா கோரிக்கை

Share:

பத்துகேவ்ஸ், தாமான் செலாயாங் பெர்மாத்தாவில் உள்ள சிறார் இல்லம் ஒன்றில், 17 வயதிற்கு உட்பட்ட 20 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் அதிர்ச்சித் தகவல் அம்பலமானதைத் தொடர்ந்து சிறார் இல்லங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என பெர்த்துபுஹான் கெபாங்கித்தான் தீகா தாங்கான் சிலாங்கூர் அமைப்பின் தலைவர் மாறன் சுப்பையா வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு சிறார் இல்லத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை அரசாங்கம் கட்டாயமாக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அந்த கண்காணிப்பு கேமராக்களின் நேரலைத் தொடர்பு இல்லத்தின் நிர்வாகிகளுக்கு மட்டுமின்றி, அந்த இல்லத்திற்கு நிதியுதவி மற்றும் ஆதரவு வழங்கும் முக்கிய தரப்பினரிடமும் இருக்க வேண்டும். இதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் என்றும், இத்தகைய கொடூரச் செயல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிசிடிவி கேமராக்கள் இருப்பது, குற்ற எண்ணம் கொண்டவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு பாதுகாப்பு அரணாக அமையும். கண்காணிப்பு அதிகாரத்தை இல்ல நிர்வாகத்துடன் மட்டும் சுருக்காமல், ஆதரவு வழங்கும் தரப்பினரிடமும் பகிர்வது, அதிகார துஷ்பிரயோகத்தைத் தவிர்க்க உதவும்.

சமூக நல இலாகா, இத்தகைய இல்லங்களுக்கு உரிமம் வழங்கும்போதே, சிசிடிவி கண்காணிப்பு மற்றும் முறையான பின்னணி சோதனைகளை கட்டாய நிபந்தனையாக மாற்ற வேண்டும் என்று மாறன் வலியுறுத்தினார்.

எதிர்காலத் தூண்களாகக் கருதப்படும் சிறுவர்கள், பாதுகாப்பிற்காக ஒப்படைக்கப்படும் இல்லங்களிலேயே இத்தகைய கொடூரங்களுக்கு ஆளாவதைச் சமூகம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வது என்பது வெறும் நிர்வாகப் பணி மட்டுமல்ல, அது நம் ஒவ்வொருவரின் அறப்பணியாகும் என்பதையும் மாறன் வலியுறுத்தினார்.

Related News