கோலாலம்பூர், ஜனவரி.21-
தென்னிந்திய பெருங்கடலில், மாயமான எம்எச்370 விமானத்தைத் தேடும் பணிகள், கணிசமான ஆய்வுப் பரப்பை எட்டியுள்ள நிலையில், இதுவரை எந்தவொரு குறிப்பிடத்தக்க புதிய கண்டுபிடிப்போ அல்லது உறுதியான தீர்வுகளோ கண்டறியப்படவில்லை.
கடந்த ஜனவரி 15-ஆம் தேதி நிலவரப்படி, தேடும் பணிகளில் ஈடுபட்டு வந்த Armada 8605 என்ற கப்பலானது 7,236.40 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவை எட்டியுள்ளது.
இத்தகவலானது எம்எச்370 பயணிகளின் குடும்பத்தினருக்கான சங்கத்தின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட தேடுதல் நடவடிக்கை முன்னேற்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேடுதல் நடவடிக்கைகளானது, தென்னிந்தியப் பெருங்கடல் பகுதியிலுள்ள ஏழாவது வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன என்றும், இதற்காக மூன்று நீருக்கடியில் இயங்கும் சிறப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 6 மற்றும் ஜனவரி 14 ஆகிய தேதிகளுக்கு இடையில், இந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் தடையின்றி நடைபெற்றதாக அந்த அறிக்கை கூறுகின்றது.
கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி முதல், தென்னிந்தியப் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில், Ocean Infinity என்ற நிறுவனத்தால் இந்த தேடும் பணிகளானது மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.








