கோலாலம்பூர், டிசம்பர்.19-
2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ திட்டங்களின் கீழ் உள்ள அனைத்து அனுகூலங்களுக்கான விண்ணப்பங்களையும் ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பிக்கலாம் என்று மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
சந்தாதாரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் இனி நேரில் சொக்சோ அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. மாறாக, கைபேசி அல்லது கணினி மூலமாக 'லிண்டோங் ஃபயேடா’ போர்ட்டலைப் பயன்படுத்தி எங்கிருந்தும் விண்ணப்பிக்கலாம்.
ஓன் லைன் மூலம் நாடு முழுவதும் உள்ள 54 சொக்சோ அலுவலகங்களில் சந்தாதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
மனித வள அமைச்சின் கீழ் உள்ள சொக்சோ தலைமையகத்திற்கு இன்று தமது முதலாவது வருகையை மேற்கொண்ட டத்தோ ஶ்ரீ ரமணன் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
தற்காலிக மற்றும் நிரந்தர முடத்தன்மை, ஓய்வூதியம், சார்ந்திருப்பவர்களுக்கான அனுகூலங்கள் மற்றும் தொழில்சார் நோய்களுக்கான இழப்பீடு உள்ளிட்ட அனைத்துப் அனுகூலங்களுக்கும் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.








