கோலாலம்பூர், நவம்பர்.21-
உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தும், இந்திகாந்தியின் மகள் பிரசன்னா டிக்ஷாவை இன்னும் கண்டுபிடிக்காதது குறித்து வழக்கறிஞர் என்ற முறையில் தாம் வெட்கித் தலைக்குனிவதாக மனித உரிமைப் போராட்டவாதி அம்பிகா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஒரு நாகரீகமான சமூகமாக நாம் இருந்தும், 16 ஆண்டுகளாகத் தனது மகளுக்காக நீதிக் கேட்டுக் சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஒரு தாயிடம் அந்தக் குழந்தையை ஒன்றுச் சேர்க்க முடியாமல் போனது கண்டு தாம் வெட்கப்படுவதாக அம்பிகா குறிப்பிட்டார்.
11 மாதக் கைக்குழந்தையாக இருந்த போது தூக்கிச் செல்லப்பட்ட அந்தக் குழந்தைக்கு இன்று 17 வயது ஆகிறது. பருவ மங்கையாக வளர்ந்திருக்கும் அந்தக் குழந்தை, தாயின் அரவணைப்பு இல்லாமலே காலத்தை கழித்து வருகிறது.
எனவே அந்தக் குழந்தையைத் தாயிடம் சேர்ப்பதற்கு நீதிக் கேட்டுக் போராடி வரும் இந்திராகாந்தி, நாளை சனிக்கிழமை கோலாலம்பூரில் நடத்தவிருக்கும் ஆட்சேப ஊர்வலத்தில் தாம் பங்கேற்கவிருப்பதாக அம்பிகா உறுதி அளித்தார்.
இதனிடைய இந்திராகாந்தியின் இந்த ஆட்சேப ஊர்வலத்தில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் புதல்வி மரினா மகாதீரும் கலந்து கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார்.








