பாகான் டாலாம், நவம்பர்.02-
பினாங்கு பாகான் டாலாம், ஶ்ரீ பண்டாரில் வீற்றிருக்கும் பசார் அவாம் எனும் ஈரச்சந்தை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 700 ரிங்கிட் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.
எட்டு மாதங்களாக நடைபெற்ற மேம்பாட்டுப் பணிகளில் பசார் அவாம் ஶ்ரீ பண்டார் கட்டடம் முழுவதுமாகச் சாயம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் புதிய முயற்சியாக உடல் ஊனமுற்றவர்களும் பயன்படுத்துவதற்காக வழிப்பாதை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஈரச்சந்தையைச் சுற்றி பாதுகாப்பான வடிகால் மூடி பொருத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகம் வந்து போகும் இடங்களில் இம்மாதிரியான பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதை உறுதிச் செய்வது, எங்களுடைய முதன்மை நோக்கமாகும் என்றார் குமரன்.
மக்களின் வசதிக்காக மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வலியுறுத்தினார்.

இந்த மேம்பாட்டுத் திட்டத்தை ஒட்டி கருத்து தெரிவித்த பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், இந்த மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடர்ந்து இப்பகுதியில் அமைந்துள்ள பொது கழிப்பறையும் மேம்படுத்தப்படும் என்றார்.

இதனிடையே கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி மலேசிய புள்ளி விவர இலாகா வெளியிட்ட தகவலின்படி தொழிலாளர்களின் உற்பத்தித் திறனில், பினாங்கு மாநிலம் தற்போது 14 மாநிலங்களில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது என்று அறிவித்துள்ளது. இது உண்மையிலேயே அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் குறிப்பிட்டார்.

இந்த பின்னடைவுக்கான காரணம் என்ன என்பது குறித்து ஆராயப்பட வேண்டும். காரணம், இதில் பினாங்கு எதிர்கால நலன் சார்ந்துள்ளது. எந்தெந்த வகையில் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை உயர்த்த முடியும் என்பது குறித்து நாம் ஆராய வேண்டும் என்று லிம் வலியுறுத்தினார்.








