Mar 23, 2026
Thisaigal NewsYouTube
அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலய திருவிழா கொடியேற்று விழா
தற்போதைய செய்திகள்

அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலய திருவிழா கொடியேற்று விழா

Share:

சிரம்பான், ஜுன் 28-

சிரம்பான், சுங்கை காடுத் , தமான் துவங்க்கு ஜாப்பார் பகுதியில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை கொடியேற்று விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

வரும் ஜுலை 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் திருவிழாவின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் காலை 9.31 மணிக்கு தமிழ் வேதங்கள் ஓத, மங்கல வாத்தியம் முழங்க கொடியேற்று விழா நடைபெற்றது. ..

நோன்பிருந்து நூற்ற வெள்ளைத் துணியில், இடபமும் மற்ற மங்கல பொருட்களையும் வரைந்து, வழிபட்டு, திருமாமறைகள் ஓதி, பண்ணிசையோடு பெருமைமிகு இடபகொடி மரத்தில் ஏற்றும் விழாவில் அதிகமான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

முன்னதாக, காலை 7.01 மணிக்கு அம்மை அப்பர் கலச வழிபாடு சிவவேள்வி, நிறையவி நல்கல், பேரொளி தரிசனம், சிறப்பு திருமஞ்சம் உட்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பொது மக்களுக்கு திருநீறு பிரசாதமும் வழங்கப்பட்டது.

அன்றைய தினம் மாலை 7 மணியளவில் ஆலய பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடிமர பூஜை, வசந்த மண்டப சிறப்பு பூஜை, திருமுறை விண்ணப்பம், அம்மை அப்பர் ஆலய பிரகாரம் வருதல், உபயதாரர்கள் சிறப்பு செய்தல், பேரொளி தரிசனம் மற்றும் அடியார் பெருமக்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலய வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு ஜுன் 27 ஆம் தேதி முதல் ஜுலை 9 ஆம் தேதி சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து கணபதி வேள்வி வழிபாடு, அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

அனைத்து பூஜைகளும் திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் ஆலோசனையின்படி நடைபெற்று வருகிறது.

Related News