Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மனைவியைக் கொலை செய்ய முயற்சி: ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மனைவியைக் கொலை செய்ய முயற்சி: ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

Share:

பாலிக் பூலாவ், செப்டம்பர்.04-

கடந்த வாரம் தனது மனைவியைக் கத்தியால் தாக்கிக் கொலை செய்ய முயற்சி செய்ததாக ஆசிரியர் ஒருவர், பினாங்கு, பாலிக் பூலாவ் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

முகமட் நஸ்ரி இஸுடின் முகமட் ஸுபைரி என்ற 30 வயதுடைய ஆசிரியர் தனது மனைவி ஹனிஸ் சோஃபியா ஹம்டான் கழுத்தில் கத்தியினால் கடும் காயம் விளைவித்து அவரைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி காலை 5.45 மணியளவில் பாயான் லெப்பாஸ், சுங்கை ஆரா, தாமான் தூனாஸ் மூடா, லிந்தாங் பாயான் 1 இல் உள்ள தங்கள் வீட்டில் அந்த ஆசிரியர் இந்த அராஜகத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

பினாங்கு, திமோர் லாவுட் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் அந்த ஆசிரியர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

தனது மனைவியைக் கத்தியால் வெட்டிய பின்னர் தன்னையும் காயப்படுத்திக் கொண்ட அந்த ஆசிரியரின் மனோநிலை குறித்து பரிசோதனை செய்யப்பட வேண்டும் நீதிமன்றத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

பினாங்கு மருத்துவமனை வழங்கிய பரிந்துரைக்கு ஏற்ப அவர், பேரா, உலு கிந்தா, தஞ்சோங் ரம்புத்தான், பஹாகியா மனநல மருத்துவமனையின் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பிராசிகியூஷன் தரப்பினர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டனர்.

அதற்கு அனுமதி அளித்த நீதிமன்றம், அந்த ஆசிரியரை மனநல சோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டது.

Related News