போர்ட்டிக்சன், செப்டம்பர்.04-
இரண்டு சிறார்கள், தங்களது தாய், தந்தையுடன் சென்ற வாகனம், சாலையை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததில் அந்த இரண்டு சிறார்கள் நீரில் மூழ்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்பட்ட வேளையில் அவ்விருவரில் ஒருவர் காப்பாற்றப்பட்டார்.
அந்த இரண்டு சிறார்களில் 9 வயது சிறுவன் உயிரிழந்த வேளையில் அவனது 8 வயது தங்கை காரில் சிக்கிய நிலையில் மீட்புப் பணியாளர்களால் காப்பாற்றப்பட்டார்.
இன்று முற்பகல் 11.44 மணியளவில் போர்ட்டிக்சன், தஞ்சோங் ஆகாஸ் ஆற்றுப் பாலத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்த சிறார்களின் 40 வயது மதிக்கத்தக்க தாய், தந்தையரைப் பொதுமக்கள் துரிதமாகக் காப்பாற்றினர். எனினும் காணாமல் போன அந்த இரண்டு சிறார்களைத் தேடும் பணி முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டது.
இந்நிலையில் பிற்பகல் 1.28 மணியளவில் அந்த எட்டு வயது சிறுமி, நீரின் மத்தியில் காருக்குள் தத்தளித்துக் கொண்டு இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரின் சகோதரனின் உடல் பிற்பகல் 1.47 மணிக்கு மீட்கப்பட்டது.
மூச்சுத் திணறலுக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படும் அந்தச் சிறுமி தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இரண்டு சிறார்களைத் தேடும் பணியில் தீயணைப்பு, மீட்புப் படையைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டனர்.








