கோலாலம்பூர், அக்டோபர்.12-
மலாயாவின் பொருளாதார வளர்ச்சிக்கு செட்டியார் சமூகம் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், கோலாலம்பூரில் உள்ள லெபோ அம்பாங் சாலையை செட்டி ஸ்ட்ரிட் எனப் பெயர் மாற்றம் செய்ய மஇகா துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ மு.சரவணன் முன்மொழிந்துள்ளார். முன்னொரு காலத்தில், இந்தப் பகுதியானது தென் இந்திய வர்த்தகர்களின், குறிப்பாக வட்டித் தொழிலின் முக்கிய மையமாக விளங்கியதால் 'செட்டி தெரு' அல்லது Lorong Ceti என்று அழைக்கப்பட்டது.
செட்டியார்கள் வெறும் கடன் வழங்குபவர்கள் மட்டுமல்ல, உள்ளூர் தொழில்முனைவோருக்கு பிரிட்டிஷ் வங்கிகள் கடன் மறுத்த போது ஈயச் சுரங்கத் தொழிலாளர்கள், ரப்பர் தோட்ட உரிமையாளர்கள், சிறு வணிகர்கள் ஆகியோருக்கு நிதி ஆதரவு அளித்து பொருளாதார எழுச்சிக்கு அமைதியான முறையில் உதவியவர்கள் என்றும் சரவணன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தப் பெயர் மாற்றம் ஓர் அடையாளமாக மட்டுமல்லாமல், வரலாற்று உண்மையைப் மீட்டெடுப்பதாகவும், செட்டியார் சமூகத்தின் பாரம்பரியத்தை அங்கீகரிப்பதாகவும் அமையும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.








