கோலாலம்பூர், டிசம்பர்.23-
புகைப்பிடித்தலுக்கு எதிரான சட்டம் வரையறுக்கப்படும் பொழுது, லஞ்ச ஊழல் முயற்சிகள் நடந்ததாக டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸாலிஹா முஸ்தஃபாவின் முன்னாள் அரசியல் செயலாளர் ஜி. சிவமலர் எஸ்பிஆர்எம்மில் புகார் அளித்துள்ளார்.
அந்த சூழ்நிலையில், புகையிலை வியாபாரிகளிடமிருந்து, அழுத்தமும், லஞ்சமும் கொடுக்கும் முயற்சிகளும் நடந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
டாக்டர் ஸாலிஹா சுகாதார அமைச்சராக இருந்த போது, சிவமலர் அவரது சிறப்பு அதிகாரியாகச் செயல்பட்டு வந்தார்.
அதே வேளையில், டாக்டர் ஸாலிஹா பிரதமர் துறையில் அமைச்சராக நியமிக்கப்பட்ட போதும், சிவமலர் அவரது அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
புகையிலை வியாபாரிகளிடமிருந்து சலுகைகளும், லஞ்சம் கொடுக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்ட போது, டாக்டர் ஸாலிஹா தனது கொள்கைகளில் நிலையாக இருந்தார் என்றும் சிவமலர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
பொது சுகாதாரத்திற்கு வழிவகுக்கும் வகையில், புகைப்பிடிக்கும் பொருட்களைக் கட்டுப்படுத்தும் சட்டம் 2024 -இன் GEG அம்சத்தை கைவிடுவதற்கு, 50 மில்லியன் ரிங்கிட் வரை சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், புகையிலை வியாபாரிகள் டாக்டர் ஸாலிஹாவை தனது அமைச்சை விட்டு வெளியேறச் சொன்னதாகவும் சிவமலர் தெரிவித்துள்ளார்.
எனவே இது குறித்து எஸ்பிஆர்எம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சிவமலர் வலியுறுத்தியுள்ளார்.








