இந்தியாவுக்குப் பயணம் செய்ய முயன்ற போது, குடிநுழைவுத் துறையின் கருப்புப் பட்டியலில் பெயர் இருப்பதாகக் கூறி விமானத்தில் ஏறத் தடை செய்யப்பட்ட பெண்ணுக்கு அரசாங்கம் 75 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு வழங்கியுள்ளது.
45 வயதான எஸ். சுமதி என்பவருக்கு 70 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடாகவும், 5 ஆயிரம் ரிங்கிட் வழக்குச் செலவாகவும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகை தொடர்பான உடன்பாடு, கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புதல் தீர்ப்பாகப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் முன்வைத்த இழப்பீட்டுத் தொகையை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்ட சுமதியின் வழக்கறிஞர் எம். மனோகரன், நீதிமன்ற உத்தரவின் படி, சுமதியின் வங்கிக் கணக்கிற்கு இழப்பீட்டுத் தொகையானது கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு புதுடெல்லி செல்ல விமான நிலையம் சென்ற போது, தனது கடப்பிதழ் கருப்புப் பட்டியலில் இருப்பதாகக் கூறி விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் மற்றும் மலேசிய அரசுக்கு எதிராக சுமதி வழக்குத் தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








