கோலாலம்பூர், பிப்ரவரி.10-
Transparency International வெளியிட்ட 2025-ஆம் ஆண்டிற்கான ஊழல் மலிவு குறியீட்டில் மலேசியா கடந்த ஆண்டை விட முன்னேற்றம் கண்டுள்ளது.
கடந்த ஆண்டு 57-வது இடத்தில் இருந்த மலேசியா, தற்போது 54-வது இடத்தைப் பிடித்துள்ளது. இப்பட்டியல் 182 நாடுகளின் பொதுத்துறை ஊழல் நிலைகளை மிகவும் ஊழல் நிறைந்தது என்று 0 குறியீட்டில் தொடங்கி, மிகவும் தூய்மையானது என்று 100 குறியீட்டு வரையிலான புள்ளிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது.
இந்த ஆண்டு மலேசியா 52 புள்ளிகளைப் பெற்றுள்ளது; இது 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் பெற்ற 50 புள்ளிகளை விட அதிகமாகும். கடந்த சில ஆண்டுகளாக தேக்க நிலையில் இருந்த மலேசியாவின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள், தற்போது முன்னேற்றம் கண்டுள்ளதை இது காட்டுகிறது.
இதற்கு முன்னர் மலேசியா 2020-இல் 51 புள்ளிகளையும், 2021-இல் 48 புள்ளிகளையும் மற்றும் 2022-இல் 47 புள்ளிகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது
இந்த முன்னேற்றமானது, நாட்டில் நிர்வாகத் சீர்திருத்தங்கள் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. எவ்வாறாயினும், சர்வதேச அளவில் இன்னும் சிறந்த இடத்தைப் பிடிக்கவும், நிர்வாகத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும் கூடுதல் சட்ட மாற்றங்கள் மற்றும் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் தேவை என நிபுணர்கள் கருதுகின்றனர்.








