ஈப்போ, ஆகஸ்ட்.26-
கோலக்கிள்ளான் துறைமுகம் வாயிலாக சீனாவிலிருந்து உறைந்த கோழி வால்களைக் கடத்தி வரும் முயற்சியை மலேசிய சுங்கத்துறை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
பேரா மாநில சுங்கத்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் மூலம் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு கொள்கலனைச் சோதனையிட்டது மூலம் இந்த வெற்றி கிட்டியுள்ளதாக பேரா மாநில இயக்குநர் முகமட் நட்ஸ்ரி அரிஃபின் தெரிவித்தார்.
அந்தக் கொள்கலனில் 29,000 கிலோ எடை கொண்ட 'உறைந்த கோழி வால்கள்' 14 ஆயிரத்து 4 பாக்கெட்டுகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட இவற்றின் மதிப்பு 2 லட்சத்து 75 ஆயிரத்து 500 ரிங்கிட்டாகும். இதற்குச் செலுத்த வேண்டிய வரிப்பணம் 13 ஆயிரத்து 775 ரிங்கிட்டாகும் என்று அவர் விளக்கினார்.








