புத்ராஜெயா, ஆகஸ்ட்.07-
எதிர்வரும் அக்டோபர் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், அண்மையில் வெளியிடப்பட்ட 13வது மலேசியத் திட்டத்தின் இலக்குகளை ஆதரிக்கும் வரவு செலவுத் திட்டமாக விளங்கும்.
உச்ச வரம்பை உயர்த்துதல், அடித்தள வரம்பை உயர்த்துதல், பொது நிர்வாகத்தில் நல்லாட்சியை வலுப்படுத்துதல் ஆகிய மூன்று முக்கியக் கூறுகளில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தும்.
2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் எதிர்வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற நிகழ்ச்சி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச வரம்பை உயர்த்துவதன் மூலம் நாட்டின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதையும் உயரிய வளர்ச்சி, அதிக தாக்கம் உள்ள துறைகள், குறிப்பாக செமிகண்டக்டர், எரிசக்தி மாற்றம் மற்றும் இஸ்லாமிய பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அஸிசான் கூறினார்.








