கோலாலம்பூர், ஆகஸ்ட்.16-
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலேவிடம் கோலாலம்பூர் டாங் வாங்கி மாவட்ட போலீசார் நேற்றிரவு சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இரவு 11 மணியளவில் அக்மால் போலீஸ் நிலையத்தை வந்தடைந்தார். அதற்கு முன்னதாக அவரின் ஆதரவாளர்கள் என்று நம்பப்படும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், போலீஸ் நிலையத்தின் முன் காத்திருந்தனர்.
போலீசாரின் 80 தொடர் கேள்விகளுக்கு அக்மால் பதில் அ ளித்ததுடன், போலீசாருக்கு மிகுந்த ஒத்துழைப்பு நல்கியதாக அந்த மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினரின் வழக்கறிஞர் ஐஸாட் அஸாம் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை, பினாங்கு, கெப்பாளா பாத்தாஸில் ஒரு சீனர் கடையின் முன் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் அக்மாலிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
1948 ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம், குற்றவியல் சட்டம் 233 பிரிவு மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் அக்மாலிடம் விசாரணை நடத்தப்பட்டதாக வழக்கறிஞர் ஐஸாட் அஸாம் தெரிவித்தார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அக்மால், போலீசாரின் அனைத்து கேள்விகளுக்கும் தாம் பதில் அளித்ததாகவும், விசாணைக்கு முழு ஒத்துழைப்பு நல்கியதாகவும் குறிப்பிட்டார்.
போலீசாரின் விசாரணைக்கு பயந்து தாம் ஓடிவிடவில்லை என்றும், எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்வதற்குத் தாம் உறுதிப் பூண்டு இருப்பதாக அக்மால் தெரிவித்தார்.








