Oct 17, 2026
Thisaigal NewsYouTube

ஆடவரைத் தாக்கியதாக பகாங் அரசப் பேராளர் உட்பட ஐவர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆடவரைத் தாக்கியதாக பகாங் அரசப் பேராளர் உட்பட ஐவர் மீது குற்றச்சாட்டு

குவந்தான், நவ. 7-


குதிரை லாயத்தில் கத்தியைக்கொண்டு ஆடவரைத் தாக்கி, காயம் விளைவித்ததாக பகாங் அரசப் பேராளர் , ஒரு போலீஸ்காரர் உட்பட ஐவர், குவந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

20 க்கும் 44 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரும், மாஜிஸ்திரேட் ராஜா நோர்ஸுஸியானா ராஜா மாமாட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. குற்றச்சாட்டின் தன்மையை புரிந்துக்கொள்வதற்கு அடையாளமாக அந்த ஐவரும் தலையை ஆட்டினர்.

பகாங் அரசப் பேராளரான 20 வயது தெங்கு எடி அகாஷ்யா தெங்கு அப்துல் ரஹ்மான், 39, வயது நிக் நோர்ஹிஷாம் அப்பெண்டி நிக் முகமட் ஸானி, 44 வயது முகமட் பவுஸி முகமட் நூர், 32 வயது முகமட் தாவ்பிக் டாவுட் மற்றும் 38 வயது கையிருல் அஸார் ரோஸ்லி ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட அந்த ஐந்து நபர்கள் ஆவார்.

இந்த ஐவரும், சம்பவம் நடந்த அன்று அதிகாலை 12.20 மணியளவில் குவந்தான், ஜாலான் தெலுக் சிசேக்கில் உள்ள ஒரு குதிரை லாயத்தில் 44 வயது அலியாஸ் அவாங் என்பவரை வேண்டுமென்றே தாக்கி காயம் விளைவித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய சட்பம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் ஐவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

எனினும் ஐவரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரியதால், ஒவ்வொரையும் தலா 7 ஆயிரம் வெள்ளி ஐாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. தவிர, வழக்கு விசாரணை முடியும் வரையில் பாதிக்கப்பட்ட நபருக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்றும், மாதத்திற்கு ஒரு முறை போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

பகாங் அரச பேராளர் ஒருவர் உட்பட சில தனிநபர்கள் தம்மை தாக்கியதாக பாதிக்கப்பட்ட நபர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டதுடன், பகாங் அரசப் பேராளர் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் தமக்கு நீதி வேண்டும் என்ற கோரியிருந்தார்.

நாட்டு மக்களின் கவத்தை ஈர்த்த இந்த சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த பகாங் பட்டத்து இளவரசர் தெங்கு ஹஸனால் இப்ராஹிம் ஆலாம் ஷா சுல்தான் அப்துல்லா, இந்த தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படும் நபர், பகாங் அரசப் பேராளராக இருந்த போதிலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம். நீதி நிலைநாட்டப்படும் என்று கூறி, இவ்விவகாரம் குறித்து உடனடியாக புலன் விசாரணை செய்யப்படவேண்ணடும் என்று கூறி, போலீசாருக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →