புத்ராஜெயா, டிசம்பர்.27-
டிஜிட்டல் தளங்களில் குழந்தைகள் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையில், வரும் ஜனவரி 1 -ஆம் தேதி முதல் ஒழுங்குமுறை ‘சாண்ட்பாக்ஸ்’ திட்டத்தை அரசாங்கம் அமல்படுத்துகிறது.
இம்முயற்சியில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சியால் தேர்வு செய்யப்பட்ட சில சமூக ஊடகங்கள் பங்கேற்கும் என தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம், அரசாங்கம் மற்றும் சமூக ஊடக தள வழங்குநர்கள் இருவரும், தங்களிடம் உள்ள தற்போதைய தொழில்நுட்ப திறன்களை மதிப்பீடு செய்யவும், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் ஒழுங்குமுறை நடைமுறைகளை சோதிக்கவும் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சோதனைத் திட்டமானது பல மாதங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம், அமல்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் திறன்களை சோதித்து உறுதிச் செய்ய முடியும். குறிப்பாக, இணைய அபாயங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.








