புக்கிட் மெர்தாஜாம், செப்டம்பர்.14-
சமூக வலைத்தளங்களில் பெருகி வரும் இணையச் சூதாட்ட விளம்பரங்கள் மலேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் குறித்து மெட்டா நிறுவனத்துடன் நேரடியாகப் பேச்சு வார்த்தை நடத்த, தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் முடிவு செய்துள்ளார்.
இந்தச் சந்திப்பு வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் சட்டத்திற்குப் புறம்பான சூதாட்ட விளம்பரங்கள் குறித்த கவலைகளை இந்தச் சந்திப்பில் எழுப்புவதாக அவர் கூறியுள்ளார். இந்தச் சூதாட்ட விளம்பரங்களை நீக்குவதில் மெட்டா நிறுவனம் தயக்கம் காட்டுவதாகவும், அதற்கான கட்டணம் செலுத்தப் பயன்படுத்தப்படும் கடன் அட்டைகளை முடக்க மறுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதனால், இணையச் சூதாட்டக் கும்பல்களின் வருமானம் அதிகரித்து, மக்கள் பெரும் இழப்பைச் சந்திப்பதாக அவர் கூறினார். சமூக வலைத்தளங்களை மூடுவதற்குப் பதிலாக, பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண அரசாங்கம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.








