கோலாலம்பூர், ஜனவரி.11-
தெற்கு தாய்லாந்தின் யாலா, நராதிவாட், பட்டாணி ஆகிய மூன்று மாகாணங்களில் இன்று அதிகாலை நடந்த தொடர் தாக்குதல்களில், இதுவரை மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என வெளியுறவு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. பதற்றம் நிலவும் அந்தப் பகுதிகளில் தங்கியிருக்கும் அல்லது பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள், உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு உத்தரவுகளைப் பின்பற்றி மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டாலோ அல்லது தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க, அங்குள்ள மலேசியர்கள் உடனடியாகத் தங்கள் இருப்பிட விவரங்களை அதிகாரப்பூர்வமாகப் பதிவுச் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் உதவிக்காக சொங்க்லாவில் உள்ள மலேசியத் தூதரகத்தை எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாட்டில் நிலவும் இந்த இக்கட்டான சூழலை மலேசிய வெளியுறவு அமைச்சு தொடர்ந்து மிக நெருக்கமாகக் கண்காணித்து வருவதுடன், அவ்வப்போது புதிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் தயாராக உள்ளது.








