கோலாலம்பூர், பிப்ரவரி.12-
அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரத்தை வைத்து சில தரப்பினர் மக்களிடையே இன மற்றும் மத ரீதியான பிளவை ஏற்படுத்த முயல்வதாகவும், இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்ஸான் ஜோஹான் வலியுறுத்தியுள்ளார். .
இந்த விவகாரத்தை ஒரு மனிதாபிமான மற்றும் நிர்வாகச் சிக்கலாகப் பார்க்க வேண்டுமே தவிர, அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறிய ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டு இந்த விவகாரத்திற்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும், சம்பந்தப்பட்ட அமலாக்கத் தரப்பினர் இவ்விவகாரத்தை கையாளுவார்கள். அதே வேளையில் எந்தவொரு தரப்பினரும் ஆவேசமாக அல்லது உணர்ச்சிப்படக்கூடாது என்று ஷாரெட்ஸான் ஜோஹான் வலியுறுத்தினார்.
இன்று பிற்பகலில் நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் ஜெலுத்தோங் எம்.பி. ஆர்எஸ்என் ராயர் மற்றும் உலு லங்காட் எம்.பி. முஹமட் சானி ஹம்ஸா ஆகியோருடன் இணைந்து நடத்திய செய்தியார்கள் கூட்டத்தில் ஷாரெட்ஸான் ஜோஹான் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
இவ்விவகாரத்திற்கு நல்ல முறையில் தீர்வு காணப்படும் வரையில் மக்கள் அமைதி காக்க வேண்டும். அதே வேளையில் சட்ட நடைமுறைக்கு ஏற்ப இந்த விவகாரம் கையாளப்படுவதற்கு வழிவிடப்பட வேண்டும். சில தரப்பினர் இந்த விவகாரத்தை மையப்படுத்தி மக்கள் மத்தியில் பிளவுகளையும் பேதங்களையும் விளைவிப்பதை உனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"மலேசியா பல்லின மக்கள், பல்வேறு சமயங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட நாடு. நமது நாட்டின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் இந்த பன்முகத்தன்மை ஓர் உறுதியான அடித்தளமாக அமைய வேண்டுமே தவிர, பிளவுகளை விதைப்பதாக இருக்கக்கூடாது. எனவே, இந்த விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடித்து அமைதி காக்க வேண்டும் என்று ஷாரெட்ஸான் ஜோஹான் வலியுறுத்தினார்.








