குவாந்தான், ஆகஸ்ட்.09-
பகாங் மாநில அரசப் பேராளர் என்று கூறப்படும் ஆடவர் ஒருவர், தம்மிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் என்று புகார் அளிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இவ்விவகாரம் தொடர்பான புலன் விசாரணை என்ன ஆனது என்று கிரிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தம்மை மியா என்று மட்டுமே அடையாளப்படுத்திக் கொண்ட 35 வயதுடைய அந்த கிரிகிஸ்தான் பெண், இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி கோலாலம்பூர், டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததாகக் குறிப்பிட்டார்.
அந்த ஆடவர் தம்மை உடல் ரீதியாக காயப்படுத்தினார் என்பதுடன் கைப்பேசியைச் சேதப்படுத்தினார் என்பதற்கான சிசிடிவி கேமரா பதிவுகளும் உள்ளன என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் தன்னிடம் பலவந்தமாக நடந்து கொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், நீதிக் கேட்டுத் தாம் அளித்துள்ள புகார் தொடர்பில் இதுவரை எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்று இன்று டாங் வாங்கி போலீஸ் நிலையத்தின் முன் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அந்த கிரிகிஸ்தான் நாட்டுப் பெண் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் கூட்டத்தில் அந்தப் பெண்ணுடன் ஆஜராகிய வழக்கறிஞர் கோ சியா யீ கூறுகையில், இது தொடர்பான விசாரணை அறிக்கை கடந்த ஆண்டு முற்பகுதியில் சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாகத் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்றார்.
ஆனால், அந்த விசாரணை அறிக்கை இன்னமும் சட்டத்துறை அலுவலகத்தின் பரிசீலனையில் இருந்து வருவதாக விசாரணை அதிகாரி கடந்த மாதம் தங்களிடம் தெரிவித்து இருப்பதாக வழக்கறிஞர் கோ சியா யீ தெரிவித்தார்.








