மலேசிய விமானி ஒருவர் போதைப்பொருளுடன் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், உள்நாட்டு மற்றும் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தொடர்புகள் குறித்த முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் கூறுகையில், ஜகார்த்தாவில் கடந்த 12 மற்றும் 13ஆம் தேதிகளில் 39 வயது விமானியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் இந்தத் தகவல்கள் பெறப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கே.எல்.ஐ.ஏ-வில் பாதுகாப்புச் சோதனைகளை அந்த விமானி எவ்வாறு கடந்து சென்றார் என்பது குறித்த தகவல்களும் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் மலேசியாவிலும் வெளிநாடுகளிலும் செயல்படும் அனைத்துலக போதைப்பொருள் கும்பல்களையும், அவற்றுடன் தொடர்புடைய தனிநபர்களையும் அடையாளம் காண விசாரணைக் குழுவுக்கு இந்தத் தகவல்கள் உதவியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்தோனேசியாவின் சுகர்ணோ ஹத்தா அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த ஜூலை 28ஆம் தேதி கைது செய்யப்பட்ட விமானியிடமிருந்து சுமார் 25 கிலோகிராம் எடையுள்ள, 4 கோடியே 50 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கும்பலுடன் விமானி தொடர்புகொள்ள பயன்படுத்தியதாகக் கூறப்படும் தொலைபேசி இலக்கம் மற்றும் கே.எல்.ஐ.ஏ பணியாளர்களின் தொடர்பு குறித்தும் போலீஸ் விசாரித்து வருகிறது என்று டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்








