குவாந்தான், ஆகஸ்ட்.12-
கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி கெந்திங் ஹைலண்ட்ஸில் களவாடப்பட்டவை என்று நம்பப்படும் 300 கேசினோ மென்பொருட்களில் 20 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள 200 மென்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு விட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.
கெந்திங் ஹைலண்ட்ஸிலிருந்து களவாடப்பட்ட அந்த மென்பொருட்களைச் சந்தேகப் பேர்வழியிடமிருந்து விலைக்கு வாங்கிய நபர், தானே முன்வந்து, 200 மென்பொருட்களையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளதாக யஹாயா ஒத்மான் குறிப்பிட்டார்.
சூதாட்ட இயந்திரத்திற்குரிய அந்த மென்பொருள் ஒவ்வொன்றும் 10 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடையதாகும் என்று அவர் குறிப்பிட்டார்
எந்தவோர் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தமின்றி, கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி கெந்திங் ஹைலண்ட்ஸ், லோபியில் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியிடமிருந்து 200 மென்பொருட்களைத் தாம் வாங்கியதாக அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்த சந்தேகப் பேர்வழி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தானியங்கி நுழைவாயிலான ஆட்டோகேட் மூலம் அவசர அவசரமாகத் தப்பி விட்டதாக நம்பப்படுகிறது. அந்த நபரிடம் இன்னமும் பத்து லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள 100 மென்பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த நபரைப் பிடிப்பதற்கு அனைத்துலக போலீசாரின் உதவி நாடப்பட்டுள்ளதாக யஹாயா ஒத்மான் மேலும் கூறினார்.








