உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் பரவி வரும் போலி தகவல்கள் குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை வரை மொத்தம் 47 விசாரணை கோப்புகளை மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி திறந்துள்ளது.
இந்த வழக்குகள் குறித்து தாங்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாக நாட்டின் இணைய கட்டுப்பாட்டு அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
சமீபத்திய வழக்கில், 3 லட்சத்து 29 ஆயிரம் பேரல் டீசல் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அனுப்பப்பட்டதாக தவறான தகவலை பரப்பிய ஒருவர் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட டீசல் பேரல்கள் விட்டோல் என்ற பன்னாட்டு எரிசக்தி நிறுவனத்திற்குச் சொந்தமானவை என்றும், அவை பெட்ரோனாஸ் அல்லது மலேசிய அரசாங்கத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட நபரின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ள எம்சிஎம்சி, அவரது மின்னணு சாதனத்தையும் பறிமுதல் செய்துள்ளது.
இந்த வழக்கு, வலைத்தள வசதிகளை தவறாக பயன்படுத்தியதாகக் கருதி விசாரணை செய்யப்படுவதாகவும் எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.








